Sunday, December 15, 2013

குழந்தைக்கு நீ தாயல்ல!

குழந்தைக்கு நீ தாயல்ல!
மனப் போராட்டம்
நன்றி: டாக்டர் விகடன்
 

இதை கருவாகக் கொண்டு எழுதிய கதையே  "பணம் காட்டும் நிறம்"


சேலத்தைச் சேர்ந்தவர் 32 வயதான லட்சுமி. (ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு குழந்தைகள். கணவருடன் சேர்ந்து நாள் முழுக்க கூலி வேலை செய்தாலும் கிடைப்பது என்னவோ, 300 ரூபாய்தான். இந்தச் சொற்ப வருமானத்தில், குழந்தைகளைப் படிக்கவைக்கவோ விரும்பியதை வாங்கித் தரவோ வழி இல்லை. சென்ற வருடம் தன் நான்கு வயது மகனுக்குக் காய்ச்சல் அதிகமாக, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த, நர்ஸ்களிடம், மருந்து வாங்கக்கூட முடியாத தன் இயலாமையைப் பகிர்ந்துகொண்டார். அங்கிருந்தவர்கள் லட்சுமியிடம், 'வாடகைத் தாய்’ பற்றி சொல்லி இருக்கின்றனர். 'கர்ப்பக்காலம்’ முழுவதும் ஆகும் செலவை ஏற்றுக்கொள்வதுடன், இரண்டு லட்சம் பணமும் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை, வறுமையைப் போக்க உதவும் என்பதால், வாடகைத் தாய் ஆக முடிவு செய்தார் லட்சுமி. இப்போது அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள். டெலிவரிக்காகக் காத்திருக்கிறார். 'என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய தொகையைப் பார்க்க முடியாது. என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மீண்டும் பிரசவ வலியைத் தாங்கப்போகிறேன்’ என்கிறார் லட்சுமி.
 'வாழ்வை இனிமையாக்க ஒரு வாரிசு வேண்டும்’ என்று ஏங்குபவர்கள் பலர். திருமணமான தம்பதிகளில் நூற்றில் 10 பேர் கருவுறுதலில் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். குழந்தை பெற வழியில்லாமல் போகும் பெரும்பாலான தம்பதிகள், நாடுவது 'வாடகைத் தாய் முறை’ என்ற சரோகசி (Surrogacy) முறையைத்தான். இந்த முறை, 'அம்மா என்ற தொப்புள்கொடி பந்தத்தைக்கூட விலை கொடுத்து வாங்கிவிடலாம்’ என்பது வேதனைக்குரியது.
'வாடகைத் தாய் முறை, வறுமையில் வாடும் பெண்களுக்கு என்னதான் வருமானத்தைத் தந்தாலும், வேதனையைத்தான் அவர்கள் அதிகம் சுமக்கின்றனர். இது வரவேற்கப்படவேண்டிய விஷயம் அல்ல' என்கிற மனநல மருத்துவர் ஷாலினி வாடகைத் தாயின் மனரீதியான விஷயங்களை அலசுகிறார்.
'வாடகைத் தாய் முறைக்கு, வறுமைதான் மிக முக்கியக் காரணம். எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தைக் கொடுத்து வலிகளிலிருந்து மீளத் துடிக்கும் உயர் வர்க்கத்தினர் ஒருபுறம் என்றால், அதிக வலிகளை சுமக்கவும் தயாராகி, பெற்ற பிள்ளைகளுக்கு ஓரளவாவது வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமே என்ற எண்ணத்தோடு வாடகைத் தாயாகத் தயாராகும் வர்க்கம் இன்னொருபுறம். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிக்கு குழந்தைச் செல்வமும், வாடகைத் தாயின் குடும்பத்துக்கு பணத் தேவையும் இருப்பதால், இரு தரப்பினரும் இணைந்து ஒப்பந்தம் போட்டு குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகிறார்கள்.
இந்த நிலை இல்லாமல், சுயமாக சில மீடியேட்டர்கள் மூலமாகச் செயல்படும்போதுதான் அங்கு சிக்கல்கள் உருவாகின்றன. பெரும்பாலானோர், உறவினர்கள், தெரிந்தவர்களையே வாடகைத் தாயாக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தற்போது வாடகைத் தாய் விவகாரங்கள் வெறும் புரிந்துணர்வு அடிப்படையில்தான் நடக்கிறது. இந்திய மருத்துவத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது அனுமதிக்கப்பட்டுள்ளதே தவிர, இதற்கான சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை.
மனமும் உடலும்!
குழந்தையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத தம்பதிக்கு ஒரு வரமாக, வாடகைத் தாய் முறை அமைந்திருக்கிறது என்றாலும், இந்த மருத்துவக் கண்டுபிடிப்பிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன.  
  கர்ப்பம் சுமக்கும் காலத்தில், வாழ்வில் நிகழும் பல்வேறு சூழல்கள் அவர்கள் மனதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
 தவறான முடிவெடுத்துவிட்டோமோ என்ற மன சஞ்சலம் வரலாம்.
  கருவைச் சுமப்பதில் தொடங்கி, குழந்தைப் பிறப்பு வரை, மருத்துவமனையிலோ தம்பதியின் கண்காணிப்பிலோ அல்லது அவர்களது வீட்டிலோ கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இருக்க வேண்டியிருக்கும்.
  தான் பெற்ற குழந்தைகளின் முகத்தைப் பார்க்க அனுமதி இல்லை. ராஜ உபசாரம், கேட்காமலேயே கிடைக்கும் சத்தான உணவுகள்.  ஆனால், ஒரு கவளம் வாயில் வைக்கும்போதே, தன் பிள்ளையை நினைத்து, தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கும். 'என் மகன் என்ன சாப்பிட்டானோ... ஸ்கூலுக்கு ஒழுங்காப் போனானோ... அம்மாவை நினைத்து ஏங்கி இருப்பானோ...’ என்ற கவலை தினம் தினம் வாட்டும். மனதில் கவலை தொற்றிக்கொள்ளும்போது, அதை வெளிக்காட்ட முடியாமல் மன அழுத்தம் வரவும் வாய்ப்பு இருக்கிறது.
  வயிற்றுக்கு வஞ்சனை இல்லையென்றாலும், மன அழுத்தம் ஹார்மோன் பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்.
  கர்ப்பக்காலத்தில் தாயின் ரத்தம்தான் கர்ப்பப்பைக்கும் போகிறது. அந்த நேரத்தில் தாயின் மனநிலையைப் பொறுத்தே, வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனநிலையும் இருக்கும்.
  தாய்மையின்போது கணவரின் அருகாமையும், அரவணைப்பும்தான் வலிகளை மறக்கச் செய்யும் மருந்து. ஆனால், வாடகைத் தாய் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.
  தாய்மையின் பூரிப்பும் வாடகைத் தாயின் முகத்தில் பிரதிபலிப்பது என்பது குறைவுதான். ஏனெனில், 'பிரசவம் முடிந்து, பணம் கைக்குக் கிடைக்குமா? நம் கஷ்டமெல்லாம் தீருமா? கணவர் தன் மீது அதே அன்போடு இருப்பாரா?’ என்பதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கும்.
 மனதுக்கு இதத்தையும், பொழுதுபோக்கக்கூடிய அம்சங்கள் நிறைந்து நிம்மதியையும் தருவதாக சுற்றுச்சூழல் இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் மனதில், உறவும் சுற்றமும் அருகில் இல்லாமல் இருப்பதே ஏக்கத்தை ஏற்படுத்திவிடும்.''  
- ரேவதி
 சரோகசி முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
 உடல்ரீதியாகவும், மருத்துவரீதியாகவும் ஒரு பெண்ணால் குழந்தை பெற முடியாமல் போகும்போது மட்டுமே, அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் 'சரோகசி’ முறை சிபாரிசு செய்யப்பட வேண்டும்.
 வாடகைத் தாய்க்கு கர்ப்பக்காலத்தில் கொடுக்கப்படும் பண உதவிக்கு, தகுந்த சான்றுகள் இருக்க வேண்டும். கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்துக்கும் பண உதவி அளிக்கப்பட வேண்டும்.
 வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தை, 'இன்னாரின் குழந்தைதான்’ என்று, டி.என்.ஏ. பரிசோதனை நிரூபிக்கப்பட வேண்டும்.
பிரசவித்த பிறகும் பாதிப்புகள்:
 பிரசவித்து வீடு திரும்பிய பெண்ணை, நிறைய வீடுகளில், பணம் கரைந்ததும், ''பணத்துக்காக கர்ப்பப்பையையே விட்டுக்கொடுத்தவள்தானே நீ...'' என்று  மாமியார், நாத்தனாரின் பேச்சுக்கும் ஆளாக நேரும். அந்தப் பெண், குடும்பத்துக்காகச் செய்த மிகப் பெரிய தியாகத்தைக்கூட மறந்துவிட வாய்ப்புகள் அதிகம்.
 பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட முடியாமல் போகும்போது, குழந்தைக்கு, தாய்ப்பால் குடிக்கும் அரவணைப்பு இல்லாமல் போகிறது. வருங்காலத்தில் இது குழந்தையையும் பாதிக்கலாம்.  
 வாடகைத் தாய்க்கு, பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க அனுமதி கிடையாது. ஆணா, பெண்ணா என்பதுகூட தெரிவிக்கப்படாது. அதன் முகம்கூட பார்க்க முடியாமல், ஆசையெல்லாம் நிராசையாகப் போகும்போது, மன அழுத்தத்தால் உடல் நலம் கெட்டு, குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
 இந்திய நாடு... நம் வீடு!
இந்தியாவில் வாடகைத் தாய் தொழிலில் ஓராண்டுக்கு புழங்கும் பணம் பல்லாயிரம் கோடி! இந்தியாவில், வாடகைத் தாய்க்கான முதல் மருத்துவமனை 'அகாங்ஷா’ குஜராத்தில் தொடங்கப்பட்டது.
நாட்டில் வாடகைத் தாய் தொழிலின் மையமாக குஜராத் மாநிலத்தின் சிறுநகரான 'ஆனந்த்’ திகழ்வதால், வறுமையைப் போக்க வந்த வாய்ப்பாக நினைத்து, பல ஏழைத் தாய்மார்கள், தங்கள் கர்ப்பப்பையில் குழந்தைகளைச் சுமக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இங்கு செலவாவதால், பல வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவை நாடுகின்றனர்.  
 வாடகைத் தாய் முறை
வாடகைத் தாயில், இரண்டு முறைகள் உண்டு. முதலாவது, தம்பதிகளின் உயிரணு, சினைமுட்டை சேர்ந்த கருவைச் சுமப்பது.  இந்த முறை, 'ஜஸ்டேஷனல்’ வாடகைத் தாய் முறை. வாடகைத் தாயாக வரும் பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது இரண்டாவது வகை. அதாவது, தம்பதிக்குள், மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் போகும்போது, வாடகைத் தாயாக வரும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாகப் பயன்படுகிறது. இது 'டிரெடிஷனல்’ வாடகைத் தாய் முறை.